Sports

அமெரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் இரண்டாவது வெற்றி!

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்றிரவு (11) நடைபெற்ற 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தின் 12 ஆவது போட்டியில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி, அமெரிக்காவை வீழ்த்தியது.

சாஹிப்சாதா ஃபர்ஹானின் அபாரமான அரைசதம் மற்றும் சுழற் பந்து வீச்சு தாக்குதல் என்பன இந்த வெற்றியை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.

துடுப்பட்டத்தில் சாஹிப்சாதா ஃபர்ஹான் நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

வெறும் 41 பந்துகளில் 73 ஓட்டங்களை எடுத்து பாகிஸ்தானை ஒன்பது விக்கெட்டு இழப்புக்கு 190 ஓட்டங்கள் என்ற கடினமாக இலக்கிற்கு அழைத்துச் சென்றார்.

பல அபார சிக்ஸர்களை உள்ளடக்கிய அவரது ஆக்ரோஷமான இன்னிங்ஸ், ஆரம்ப விக்கெட்டுகளை இழந்த போதிலும் பாகிஸ்தானுக்கு வலுவான ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்ய அடித்தளத்தை அமைத்தது.

பின்னர், அமெரிக்க தொடக்க வீரர்கள் சேஸிங்கை நேர்மறையாகத் தொடங்கி பவர்பிளேயில் 50 ஓட்டங்களை எட்டினர்.

எனினும், உஸ்மான் தாரிக் (3/27) மற்றும் ஷதாப் கான் (2/26) தலைமையிலான பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் குழு, மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து அமெரிக்காவை அழுத்தத்தில் தள்ளியது.

இறுதியில் ஷுபம் ரஞ்சனேவின் அரைசதமும், ஷயான் ஜஹாங்கிரின் 49 ஓட்டங்களும் இருந்தபோதிலும், அமெரிக்கா 20 ஓவர்களில் 158/8 என்ற நிலையில் தோல்வியடைந்தது.

தொடரில் பாகிஸ்தான் பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.

இதேவேளை, நேற்று மாலை சென்னை, சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 11 ஆவது போட்டியில் நியூஸிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியானது 10 விக்கெட்டுகள் மற்றும் 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியானது 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள‍ை எடுத்தது.

அணித் தலைவர் மொஹமட் வசீம் 45 பந்துகளில் 66 ஓட்டங்களையும்,அலிஷான் ஷரபு 47 பந்துகளில் 55 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 15.2 ஓவர்களில் எதுவித விக்கெட் இழப்பின்றி 175 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது.

டிம் சீஃபர்ட் 42 பந்துகளில் 89 ஓட்டங்களையும், ஃபின் ஆலன் 50 பந்துகளுக்கு 84 ஓட்டங்களையும் அதிபடியாக எடுத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button