ஊழல் ஒழிப்பு தீவிரம் மாவட்ட ரீதியாக விசேட அதிகாரங்களுடன் 24 பிராந்திய அலுவலகங்கள்!

இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக, கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை மாவட்ட மட்டத்தில் அதிகாரப்பகிர்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் இந்த வாரம் வெளியிடப்பட்ட ‘ஆளுமைக்கான செயல் திட்டம் – 2026’ அறிக்கையின்படி, இந்த அதிகாரப்பகிர்வுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பிராந்திய அலுவலகம் வீதம் மொத்தம் 24 அலுவலகங்கள் நிறுவப்படும்.
இந்த அலுவலகங்களுக்கான அதிகாரம், சட்ட வரம்பு, உத்தியோகத்தர்களின் பொறுப்புகள் மற்றும் படிநிலை அமைப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ‘அதிகாரப்பகிர்வுத் திட்டம்’ தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரப்பகிர்வு தொடர்பான விதிமுறைகளை நீதியமைச்சு இந்த ஆண்டு டிசம்பருக்குள் வெளியிடும்.
இதற்காக பிரதம நீதியரசர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர், 2027 ஜனவரி முதல் இந்தப் பிராந்திய அலுவலகங்கள் உத்தியோகபூர்வமாகத் தனது பணிகளை ஆரம்பிக்கும்.
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் கையூட்டல், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் பாரிய நிறுவன ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
உத்தியோகத்தர்களின் நியமனம், பதவி உயர்வு, ஊதியம், ஒழுக்காற்று நடவடிக்கைகள், பதவி நீக்கம் மற்றும் நடத்தை விதிகள் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் வெளியிடப்படும்.
ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் நடத்தை விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் புதிய விதிகள் வகுக்கப்படும்.
அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், கையூட்டல், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊழியர்களுக்காக விருப்ப ஓய்வுத் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
நீதியமைச்சுடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டம் இறுதி செய்யப்படவுள்ளது.




