“நடுநிலைப் பாங்குடனும் நிதானமான சிந்தனையுடனும் விளங்கிய சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம்” ; பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் அனுதாப செய்தி…

பாறுக் ஷிஹான்
சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் சலீம் அவர்களின் மறைவு செய்தி, ஊடகத்துறையையும் சமூக நல்லிணக்கத்தை நேசிக்கும் அனைத்து உள்ளங்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.
தமது அனுதாபச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
நடுநிலையையும் பொறுப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்டு செய்திகளை உருவாக்கிய மர்ஹூம் சலீம் அவர்கள், ஊடகத்துறையில் உயர்ந்த முன்னுதாரணமாக விளங்கியவர். உண்மை நிலைகளை தெளிவாகவும் நிதானமாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவரது எழுத்துக்களுக்கு தனித்துவமான ஆழமும் நம்பகத்தன்மையும் காணப்பட்டது.
பாரபட்சமற்ற அணுகுமுறையுடன், எந்த அழுத்தங்களுக்கும் இடங்கொடுக்காது நேர்மையுடன் செயல்பட்டவர் அவர் உணர்ச்சிவசப்படாமல், யதார்த்த நிலைகளை தூய சிந்தனையுடன் அணுகிய அவரது செய்தியி பாணி, வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்திருந்தது.
சமூக நல்லிணக்கம், அமைதி மற்றும் சத்தியம் ஆகிய உயர்ந்த மதிப்புகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த அவர், ஊடகத் துறையில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றவர். அவருடன் பகிர்ந்த அனுபவங்கள் என்றும் நினைவில் நிற்கும் அரியவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் சலீம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அவரை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தில் இடம் வழங்குவானாக. மேலும், அவரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சகிப்புத்தன்மையையும் மன அமைதியையும் அருள்பாலிப்பானாக என்றும் பிரார்த்தித்துள்ளார்.




