ஐபிஎல் 2026: பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு அனுமதி! – ரசிகர்கள் உற்சாகம்

பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற எம்.சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் 2026 போட்டிகளை நடத்துவதற்கு கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் தொடக்க ஆட்டம், வரும் மார்ச் 28 அன்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த மைதானம் என்பதால், இந்தத் தொடரின் பிளே-ஓப் ஆட்டம் ஒன்றும், இறுதிப் போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, மைதானத்தின் பாதுகாப்பை பலப்படுத்த கர்நாடக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இதற்காகக் குழுவொன்று அமைக்கப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அந்தப் பரிந்துரைகளின்படி மைதானத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரசிகர்கள் சிரமமின்றி உள்ளே நுழைய, கூடுதலாக 6 புதிய நுழைவு வாயில்கள் கட்டப்பட்டு, ஏற்கனவே இருந்த வாயில்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க கியூ.ஆர். குறியீடு கொண்ட டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பெங்களூரு மெட்ரோ தொடருந்து கழகத்துடன் இணைந்து, போட்டி நடைபெறும் நாட்களில் இரவு 1 மணி வரை மெட்ரோ சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் போட்டி டிக்கெட்டைக் காண்பித்து இலவசமாகப் பயணம் செய்யவும் வாய்ப்புள்ளது.
நடப்புத் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனது 7 சொந்த மைதானப் போட்டிகளில், 5 போட்டிகளை பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும், மீதமுள்ள 2 போட்டிகளை ராய்ப்பூரிலும் விளையாட உள்ளது.
ஏப்ரல் 5 ஆம் திகதி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியும் பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




