சமையல் எரிவாயுவுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4330ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1742 ரூபாவாகவும் காணப்படுகிறது.
நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கேள்வியெழுப்பினார்.
இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் கடும் விசனம் வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தான் விரும்பிய வகையில் ஏனைய நாடுகளுக்கு தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் தனது விருப்பத்துக்கு அமைய சிலிண்டரின் விலையை அதிகரித்துக் கொள்கிறது.
எரிவாயு உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்களும், விற்பனையாளர்களும் தீர்மானித்துக் கொள்கிறார்கள். அவர்களே விலைகளை அதிகரித்துக் கொள்கிறார்கள். ஆகவே நுகர்வோருக்கு சாதகமான வகையில் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாட்டு விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில், உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் தேசிய மட்டத்தில் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். இருப்பினும் நாட்டின் மற்றும் நிறுவன கட்டமைப்பின் நிதி நிலைமை காரணிகள் ஊடாக சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதகாலமாக விலையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை என்று லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.




