Sri Lanka News

தனியார் பேருந்துகள் இயங்குவது 50% ஆகக் குறையும் அபாயம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டிப்போக்கள் ஊடாக மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டால், தினசரி இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சுமார் 13,000 தனியார் பேருந்துகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய கெமுனு விஜேரத்ன, இந்த நடைமுறையினால் 6,500 பேருந்துகளை மாத்திரமே இயக்க முடியும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதுள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிப்போக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும், இதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: “இது ஒரு பாரதூரமான பிரச்சினையாக மாறும். எங்களிடம் உள்ள பஸ்களுக்கு எரிபொருள் பெறுவதற்கு தற்போதுள்ள டிப்போக்களின் எண்ணிக்கை போதாது.

இதனால் நீண்ட வரிசைகள் ஏற்படும். அதேபோல், அவர்கள் இரவு நேரங்களில் டீசல் வழங்குவதில்லை. நாங்கள் சேவையில் ஈடுபட்டுவிட்டுத்தான் எரிபொருள் பெற வருகிறோம்.

ஆனால் டிப்போக்கள் மாலை 5 மணிக்கே மூடப்படுகின்றன. அவ்வாறு நடந்தால் அடுத்த நாள் எம்மால் சேவையில் ஈடுபட முடியாது, வீதியிலேயே கிடக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதன் விளைவாக இலங்கை முழுவதும் 50 சதவீத பஸ்களை மாத்திரமே இயக்க முடியும். QR நடைமுறைக்கு முன்னதாகவே இதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு நான் இரண்டு வாரங்களுக்கு முன்பே கூறினேன்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாம் அறிவோம். ஆனால் ஏழை மக்கள் தனியார் மற்றும் அரச பஸ்களிலேயே பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே, பொதுப் போக்குவரத்துச் சேவைக்கு முன்னுரிமை வழங்குங்கள், இல்லையெனில் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும். இலங்கையில் உள்ள 13,000 பஸ்களில் 6,500 மாத்திரமே ஓடும் நிலை ஏற்படும்.” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button