அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு – ஜனாதிபதி உத்தரவு!

இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் பொது அமைதியைப் பேணுதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் முழுமையாக மீளாத நிலையில், நிவாரணப் பணிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க இந்த அவசரகாலச் சட்டம் அவசியமென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு வர்த்தமானி மூலம் மின்சாரம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சேவைகள் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.




