இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கை

இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்குப் பின்னால் உள்ள மிக அரிய மற்றும் பெறுமதிமிக்க சொத்து, “அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை” என்று IMF தலைவி கிறிஸ்டலினா ஜோர்ஜிவா புகழாரம் சூட்டியுள்ளார்.
நிர்வாகம் நேர்மையாகவும், பொறுப்புடனும் செயல்படுகிறது என்ற நம்பிக்கையினாலேயே, கடினமான பொருளாதார சீர்திருத்தங்களை சகித்துக்கொள்ள இலங்கை மக்கள் முன்வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
“அரசாங்கங்களின் வேலை பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குவதே தவிர, வர்த்தக நிறுவனங்களை நடத்துவது அல்ல. பல நாடுகள் தங்களால் திறம்பட செயல்பட முடியாத துறைகளிலிருந்து இப்போது பின்வாங்கியுள்ளன. ஆனால், இலங்கையில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன.”
நாட்டைச் சரியான பாதைக்குக் கொண்டு செல்ல மக்கள் சில கஷ்டங்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அதற்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையே அடிப்படை என்று அவர் கூறினார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்கள் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்காமல், அனைத்துப் பிரஜைகளுக்கும் சமமாகச் சென்றடைவதை உறுதி செய்ய இந்த ‘நம்பிக்கை’ அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் மறுசீரமைப்பு என்பது வெறும் கொள்கைகளில் மட்டும் தங்கியிருக்காமல், மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிணைப்பிலேயே தங்கியுள்ளது என்பதை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.




