Sports

உலகக் கிண்ணத்துடன் விடைபெறுகிறார் சனத்: “இதுவே எனது இறுதிப் பயணம்!”

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்தொடருடன் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாகப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற சனத் ஜயசூரியவின் ஒப்பந்தம், உலகக் கிண்ணத் தொடருக்கு அப்பாலும் நீடிக்கின்ற போதிலும், அவர் அதனைத் தொடர விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

“எனது கவனம் முழுவதும் T20 உலகக் கிண்ணத்தின் மீதே உள்ளது. அதன் பிறகு பயிற்சியாளர் பதவியில் நீடிக்கும் எண்ணம் எனக்கில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று Sunday Times பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதைக் கூறியிருக்கிறார்.

T20 உலகக் கிண்ணத்திற்கான தயார்ப்படுத்தல்கள்

T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள தொடர்களை சனத் ஜயசூரிய மிக முக்கியமானதாகக் கருதுகிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:சிறந்த பயிற்சித் தளம்: “சொந்த மண்ணில் விளையாடும் இந்தப் போட்டிகளே உலகக் கிண்ணத்துக்குமுன்னதாக எமக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த தயார்ப்படுத்தலாகும். இதனை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீரர்களின் பலவீனங்களை இனங்கண்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
லசித் மாலிங்க வேகப்பந்து வீச்சாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.
துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை ஜெஹான் முபாரக் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் அனுபவங்கள் அணிக்கு வலுச்சேர்த்துள்ளன.”

கடந்த கால பெறுபேறுகளை வைத்து அணியின் முன்னேற்றத்தை ஜயசூரிய இவ்வாறு மதிப்பிடுகிறார்:”டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அணியின் முன்னேற்றம் திருப்தியளிக்கிறது. ஆனால், T20 போட்டிகளில் நாம் இன்னும் 50 சதவீத அளவிலேயே இருக்கிறோம். உலகக் கிண்ணத்தில் சவால் விடுக்க வேண்டுமானால் இதனை 70 சதவீதமாவது உயர்த்த வேண்டும்.”

துடுப்பாட்ட வீரர்கள் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு விளையாட வேண்டும் எனவும், இக்கட்டான சூழல்களைக் கையாளுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வெற்றி அல்லது தோல்வி எதுவாக இருந்தாலும், தனது இறுதிப் பணியை முழுமையான அர்ப்பணிப்புடன் செய்து முடிக்க சனத் ஜயசூரிய தயாராகி வருகின்றார்.

இலங்கை அணிக்காக துடுப்பாட்ட வீரராக, சகலதுறை வீரராக உலகக்கிண்ணத்தை வென்றுகொடுத்த சனத், 2002இல் அணியின் தலைவராக மினி உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்தவர், பயிற்றுவிப்பாளராக விடைபெறுகிற நேரம் இலங்கை நீண்ட காலமாகக் காத்திருக்கும் (2014க்குப் பின்னர்) ஒரு ICC கிண்ணத்தை வென்று தரவேண்டும் என்பதே ரசிகர்களது எதிர்பார்ப்பு.

#SanathJayasuriya #SriLankaCricket #T20WorldCup #T20WorldCup2026 #SriLankaCricketTeam #Cricket #Socialtv #CricketNews #LatestNews

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button