91 வயது வரை ஒரே நிறுவனத்தில் கடமையாற்றிய பெண்-கின்னஸில் இடம் பிடித்து உலக சாதனை !

ஜப்பானியரான யசுகோ டமாகி என்ற பெண் வழக்கத்திற்கு மாறாக, 26 வயது முதல் 91 வயது வரை ஒரே நிறுவனத்தில் அதே பதவியில் பணியாற்றி, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
1956-ஆம் ஆண்டில் 26 வயதில் நிறுவனத்தில் சேர்ந்த அவர், தொண்ணூறுகள் வரை ஒரே நிறுவனத்தில் தீவிரமாக பணியாற்றியுள்ளார்.
காலை 5:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 65 ஆண்டுகளாக தினசரி வேலை செய்து வந்துள்ளார்.
சிறிய நிறுவனமாக ஆரம்பித்த சன்கோ இண்டஸ்ட்ரீஸ், 20 ஊழியர்களுடன் தொடங்கி, 430-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பெரிய நிறுவனம் ஆக வளர்ந்துள்ளது.
யசுகோ டமாகி, பொது விவகாரத் துறை, கணக்கியல், நிர்வாக மற்றும் உள் தொடர்புகளில் முக்கிய பங்கு வகித்தார்.40 வயதில் குழுத் தலைவராக பதவி உயர்வு பெற்ற டமாகி, கணினி பயிற்சிகள், புதிய சான்றிதழ்கள், மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் திறனை தொடர்ந்து மேம்படுத்தினார்.
67 வயதில் கணினிகளை படிக்கத் தொடங்கியவர், 70 வயதில் அதில் தேர்ச்சி பெற்றார். 86 வயதிலும் கற்றலை தொடர்ந்த அவர், 90 வயதில் சமூக ஊடகங்களைத் துல்லியமாக பயன்படுத்த ஆரம்பித்தார்.
யசுகோ டமாகியின் வாழ்க்கை ஒவ்வொரு தலைமுறைக்கும் ஊக்கமளிக்கும் உதாரணமாகவுள்ளது.
அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான கற்றல் மற்றும் முயற்சி எப்படி உலக சாதனைகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டாகவுள்ளார்.




