நானுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை அடுத்த இரு மாதங்களில்!

நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் சேதமடைந்த ரயில் தண்டவாளங்கள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, சேதமடைந்த ரயில் பாலங்களைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மார்க்கத்துக்கான ரயில் சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தொடர்ச்சியான புனரமைப்பு பணிகளுக்கு மத்தியில் பதுளை மற்றும் அம்பேவல வரையான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.




