Sri Lanka News

‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) முற்பகல் கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன.

அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து புனரமைப்புப் பணிகளையும், குறித்த இடங்களின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்றும், கிராமப்புற வறுமையை ஒழிக்கவும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அரசாங்கம் தற்போது அதிக பணிகளைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், வரலாற்றில் முதல்முறையாக, இந்த பெப்ரவரி மாதத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபா நாளாந்த சம்பளம் பெறுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவை அனைத்திற்கும் மத்தியில் சிறந்த மனித உறவுகளைக் கொண்ட ஒரு சமூகம் தேவை என்றும், அரச அதிகாரிக்கும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகின்ற மக்களுக்கும் இடையிலான உறவு, மகா சங்கத்தினருக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு, பாடசாலை ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உட்பட இந்த அனைத்து உறவுகளும் இன்று வீழ்ச்சிக்கு உள்ளாகி விட்டன என்றும், நாட்டை சமூக ரீதியாகக் கட்டியெழுப்ப, இந்த உறவுகள் அனைத்தும் மீண்டும் சிறந்த முறையில் பேணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியதுடன், மகா சங்கத்தினர் உட்பட மதத் தலைவர்களுக்கு இந்த விடயத்தில் பெரும் பங்கு உண்டு என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button