India NewsNews

மாகாண சபைத் தேர்தலை தாமதிக்காது நடத்த வலியுறுத்தும்படி ஜெய்சங்கரைக் கோருவோம் என்கின்றார் சுமந்திரன்

தாம் ஆட்சிப்பீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த பின்னணியில், இன்னமும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்தும், அதனை நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்துவதற்குத் தமிழ்த் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் நாளை செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்திக்கும்போது அந்தக் கடிதத்தைக் கையளிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இக்கடிதத்தில் அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு தளங்களிலும் இந்தியா பகிரங்கமாக வலியுறுத்தி வரும் நிலையில், அந்த அழுத்தத்தைத் தொடர்ந்து பிரயோகிக்குமாறு கோரவிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதேபோன்று தாம் ஆட்சிப்பீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த பின்னணியில், இன்னமும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்தும், அதனை நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அதிகாரப் பகிர்வானது அர்த்தமுள்ளதாக அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்தக் கடிதத்தில் உள்வாங்கப்படும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

முன்னதாக குறித்த தினத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த 6 கட்சிகளின் தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்திப்பதற்கு நேர ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. எனினும், ஜெய்சங்கரின் இலங்கைக்கான திடீர் பயண ஒழுங்கின் காரணமாக அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button