News

இரு நாட்களாக நடந்த பேஸ்புக் களியாட்டம்; முக்கிய பொருளுடன் 30 பேர் கைது

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – கிரகரி வாவிக்கு அருகில் நான்காவது வாகனத் தரிப்பிடத்தில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பேஸ்புக் களியாட்டம் நிகழ்வு நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டு இன்று (19) அதிகாலை வரை நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விசேட தேடுதல் நடவடிக்கைகள், நுவரெலியா பிரதான நகருக்குள் நுழையும் அனைத்து பிரதான வீதிகளையும் மறித்து சோதனைச் சாவடிகள் அமைத்து மோப்ப நாய்களின் துணையுடன் நடைபெற்றுள்ளது.

போதைப்பொருட்களுடன் பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் கஞ்சா, ஐஸ், சிகரெட்டுகள், போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் மாவா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 35 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கம்பஹா, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மருதானை, கிராண்ட்பாஸ், பேலியகொடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button