India News

முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பா பயணம்: விஜய் குறித்த கேள்வியை தவிர்த்த ஸ்டாலின்

2021-ம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் சுமார் 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருவார காலப் பயணமாக இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் சென்றனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். நாளை (ஆகஸ்ட் 31) அவர் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் பேசுகையில், “ஒருவார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். 2021ஆம் ஆண்டு முதல் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் தோராயமாக 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பல நிறுவனங்கள் தயாரிப்பை தொடங்கிவிட்டன. இதன் மூலம் வளர்ச்சி வந்திருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு, ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களே சாட்சி.

என்னுடைய ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் தரவுகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாடுகளுக்கு நான் சென்று வந்ததன் மூலம் ரூ.18,498 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளன. நாட்டிலேயே அதிவேகமான வளர்ச்சிப் பணிகள் நடைபெறக்கூடிய தமிழ்நாட்டை நோக்கி புதிய முதலீடுகளை ஈர்க்க நான் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு செல்கிறேன். அதற்கு உங்கள் வாழ்த்துகள் எனக்கு வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் அன்புடன் நான் புறப்பட்டுச் செல்கிறேன்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டாலின், “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அவருடைய பயணங்களைப் போலவே இதுவும் இருக்கும் என்று நினைக்கிறார். ஆனால் நான் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன”, என்றார்.

2026 தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என விஜய் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் நான் அதிகம் பேசமாட்டேன்; சொல்வதை விட செயலில் காட்டுவேன். திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ புதிய வாக்காளர்களை வந்துகொண்டிருக்கின்றனர். அதுதான் உண்மை. பிஹாரில் தேர்தல் ஆணையம் செய்ததைப் போல, தமிழ்நாட்டில் யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு. பிகாரிலும் கூட மக்களை எழுச்சிப் பெற வைக்க தேர்தல் ஆணையம் உதவி செய்திருக்கிறது”என்று தெரிவித்தார்.

இதனிடையே ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, செப்.1-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார். 2-ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று, தொழில்முனைவோரை சந்திக்கிறார். 3-ம் தேதி லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் 4-ம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறார். 6-ம் தேதியும் அயலக தமிழர் நலவாரிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இங்கிலாந்தில் இருந்து 7-ம் தேதி புறப்பட்டு, 8-ம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button