News

தொகுப்பு நூலாகும் அநுரவின் உரைகள் – நாமல் சூசகப் பேச்சு

நாட்டில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடமிருந்து பெறப்படும் நிதி ஏழைகளுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஏழைகளிடமிருந்து பெற்று செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது. எனவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி எம்.பியாக பாராளுமன்றத்தில் பேசிய விடயங்களை ஹன்சாட்டிலிருந்து தொகுத்து நூலாக வெளியிடவேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான 03ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து சுமார் 4.30 மணித்தியால வரலாற்று சாதனையான உரையை நிகழ்த்தினார் என்று ஆளுந்தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இந்த வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்று சாதனைக்கான அம்சங்களைக் கொண்ட எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய வேண்டும்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 50 சதவீதமேனும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த கால வரவு செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணமளிக்கப்பட்டது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் ஏழைகளிடமிருந்து பெற்று செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் போக்கில் காணப்படுகிறது.

பொருளாதார மீட்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு மக்கள் தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜனாதிபதி அநுரகுமார கடந்த காலங்களில் எதிர்க்கட்சி எம்.பியாக பாராளுமன்றத்தில் பேசிய விடயங்களை ஹன்சாட்டிலிருந்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும் நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். உங்களைப் போன்று வைராக்கியத்துடன் செயற்படப் போவதில்லை. அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்ற முயற்சியுங்கள்’’ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button