Home இலங்கைச் செய்திகள்கல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்கள் தடுக்கப்பட்டமை அப்பட்டமான உரிமை மீறலாகும்; கிழக்கிலங்கை கல்வி, கலாசார, சமூக அபிவிருத்திப் பேரவை பலத்த கண்டனம்.!

கல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்கள் தடுக்கப்பட்டமை அப்பட்டமான உரிமை மீறலாகும்; கிழக்கிலங்கை கல்வி, கலாசார, சமூக அபிவிருத்திப் பேரவை பலத்த கண்டனம்.!

by Mohamed Siraj
0 comments

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்ககளை கடமையேற்க விடாமல் தடுக்கப்பட்ட விடயம் அப்பட்டமான உரிமை மீறலாகும் என்று கிழக்கிலங்கை கல்வி, கலாசார, சமூக அபிவிருத்திப் பேரவை பலத்த கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேரவையின் தவிசாளரும் கல்வியியலாளருமான ஏ.எல்.எம். முக்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

banner

அரச வைத்தியசாலைகளில் கடந்த பல வருடங்களாக தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த சுகாதார உதவியாளர்களுக்கு அண்மையில் சுகாதார அமைச்சினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமனம் பெற்ற ஊழியர்களில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட 09 முஸ்லிம் பெண் ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை (10) தமது கடமைகளை பொறுப்பேற்று அறிக்கையிட அங்கு சென்றிருந்தனர். எனினும் அங்கு வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

பர்தாவை அகற்றி விட்டு வந்தால்தான் கடமையேற்க அனுமதிக்க முடியும் என்றும் அல்லது வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும் அந்த ஊழியர்களிடம் கூறப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. இதன்போது இவர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது. இது மிகவும் கவலைக்குரிய செயற்பாடாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசியலமைப்பு, தாபன விதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகள் மூலம் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு விடயத்தை ஓர் அரச நிறுவனத்தின் நிர்வாகத்தினரால் தடுப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

அவரவர் கலாசார ஆடைகளுடன் வைத்தியசாலைகளில் கடமைக்கு செல்ல அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமையை முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு மாத்திரம் மறுப்பதானது அப்பட்டமான உரிமை மீறலாகும்.

இன முரண்பாடுகளையும் குரோதங்களையும் ஊக்குவிக்கின்ற இச்செயற்பாடுகளை உடனாடியாக தடுத்து நிறுத்த அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்- என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment