Home இலங்கைச் செய்திகள்அனைத்துச் சமூகத்தினரும் தத்தமது கலாச்சார உடைகளுடன் பணியாற்ற அனுமதி உள்ள நிலையில், முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் இந்தத் தடை விதிக்கப்படுவது அப்பட்டமான பாகுபாடாகும் – ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’

அனைத்துச் சமூகத்தினரும் தத்தமது கலாச்சார உடைகளுடன் பணியாற்ற அனுமதி உள்ள நிலையில், முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் இந்தத் தடை விதிக்கப்படுவது அப்பட்டமான பாகுபாடாகும் – ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’

by Mohamed Siraj
0 comments

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து பணிக்குச் சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்கள் கடமையேற்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டமை அடிப்படை உரிமை மீறலாகும் என ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’ (Women’s Corps) பெண்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள அவ்வமைப்பு, உடனடியாக தலையிட்டு தீர்வு காணுமாறு கோரி பிரதமர், மகளிர் விவகார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசரக் கடிதங்களை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’ அமைப்பின் தலைவி ஏ. எப். நிகாஸா ஷர்பீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

banner

“சுகாதார அமைச்சின் ஊடாக அண்மையில் நிரந்தர நியமனம் பெற்ற ஒன்பது முஸ்லிம் பெண் ஊழியர்கள், கடந்த திங்கட்கிழமை (10) தமது சேவையை ஆரம்பிப்பதற்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்குள்ள வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட அவர்களுக்கு நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படவில்லை.”

பர்தா ஆடையை அகற்றினால் மட்டுமே பணியில் இணைய முடியும் என்றும், இல்லையெனில் வேறு மருத்துவமனைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும் ஊழியர்கள் வற்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகப் புகார்கள் கிடைத்துள்ளன. இத்தகைய செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரியவை என்றும், இதனைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம், தாபன விதிக்கோவை மற்றும் அரச சுற்றறிக்கைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட உரிமையை நிறுவன நிர்வாகம் தன்னிச்சையாக மறுக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அனைத்துச் சமூகத்தினரும் தத்தமது கலாச்சார உடைகளுடன் பணியாற்ற அனுமதி உள்ள நிலையில், முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் இந்தத் தடை விதிக்கப்படுவது அப்பட்டமான பாகுபாடாகும் எனக் குற்றஞ்சாட்டினார்.

இப்பிராந்திய முஸ்லிம்களில் அதிகமானோர் கல்முனை வடக்கு வைத்தியசாலையின் மருத்துவ சேவையினை பெற விரும்பிச் செல்கின்றனர். இவ்வாறானா சேவை நிலையத்தில் ஒரு சிலரின் செயல்பாட்டால் இந்த துரதிஷ்டமான சம்பவம் அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.

இனங்களுக்கிடையில் வீண் முரண்பாடுகளையும் கசப்புணர்வுகளையும் தோற்றுவிக்கும் இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தங்களது ஆதரவை வழங்கிய சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’ (Women’s Corps) பெண்கள் அமைப்பு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

You may also like

Leave a Comment