Home இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பணிப்பொறுப்பேற்பு!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பணிப்பொறுப்பேற்பு!

by Nabishad
0 comments

க.டினேஸ்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று, ஆவணி மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை, யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக, யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் இலங்கைக்கான திருத்தூதரக பிரதிநிதியின் செயலர் பேரருட்தந்தை றெபேர்த்தோ லுக்கினி, பேரருட்தந்தை மல்கம் கருதினால் ரஞ்சித், இலங்கையின் ஏனைய மறைமாவட்டங்களின் ஆயர்கள், பல்சமயத் தலைவர்கள் மற்றும் இறைமக்களால் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் சிறப்பாக வரவேற்கப்பட்டு, அங்கிருந்து பவனியாக யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியின் போது பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

banner

இந்நிகழ்வில் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதரக பிரதிநிதியின் செயலர் பேரருட்தந்தை றெபேர்த்தோ லுக்கினி, பேரருட்தந்தை மல்கம் கருதினால் ரஞ்சித், இலங்கையின் ஏனைய மறைமாவட்டங்களின் ஆயர்கள், பல்சமயத் தலைவர்கள், குருக்கள், துறவிகள், அருட்சகோதரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான இறைமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்டத்தின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் பல்வேறு இடங்களில் சமய, கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவர் உரோமில் இறையியலில் உயர் கல்வியையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும், கொழும்பில் கல்வியியலில் டிப்ளோமாவையும், ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி மற்றும் கலைமானி பட்டங்களையும் பெற்றுள்ளார்.

2020ஆம் ஆண்டு ஆடி மாதம் 13ஆம் திகதி, அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்ட பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், அதே ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் திகதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஆவணி மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமிக்கப்பட்டு, அப்பொறுப்பிலும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் ஆயர் பணியானது, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

You may also like

Leave a Comment