இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பாடசாலையில் 12ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த மாணவர் ஒருவர், பாடசாலை முடிவடைந்து வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்துக்காகக் காத்திருந்தபோது, சக மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் தடாகத்துக்கு அருகில் இளைஞர் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில், உயிரிழந்தவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை தொடர்பான தகராறில் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், திருவள்ளூர் மாவட்டம் சாணாபுத்தூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் வயல்வெளியில் இரத்தக் காயங்களுடன் உடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மது போதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நண்பர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

