வளைகுடா பிராந்தியத்தில் போர் அபாயம் – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி வளங்கள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவுக்கு தமது வான்பரப்பைப் பயன்படுத்தவோ அல்லது இராணுவத் தளங்களை வழங்கவோ அனுமதிக்கும் நாடுகள், ஈரானின் பதில் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் எனத் தூதரக ரீதியாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 48 மணித்தியாலத்துக்குள் ஈரான் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்காவிட்டால், ஈரானின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் அமெரிக்கா தாக்கித் தகர்க்கும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்தே, ஈரான் அமெரிக்காவுக்கு குறித்த பதிலடி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது உலகளாவிய கச்சாய் எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேலின் ஆர்ட் மற்றும் டிமோனா ஆகிய இரு நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 01.20 மணியளவில் ஆர்ட் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாத்திரம் 88 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், 55 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.




