World News

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவு

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க்(வயது 31) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் இளம் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

அதன்படி உட்டா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிர்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து சார்லி கிர்க் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட சார்லி கிர்க்கிற்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சார்லி கிர்க்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், அவரது படுகொலை சம்பவம் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க இளைஞர்களின் இதயத்தை சார்லி கிர்க் போல் வேறு யாரும் புரிந்து கொண்டதில்லை. அவர் மீது அனைவரும் அன்பு வைத்திருந்தனர். இன்று அவர் நம்முடன் இல்லை. அவரது குடும்பத்தினருக்கு நானும் எனது மனைவி மெலனியாவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்காவின் மாபெரும் தியாகி சார்லி கிர்க்கை கவுரவிக்கும் விதமாக, அவரது படுகொலையை தேசிய துக்கமாக அனுசரித்து வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை நாடு முழுவதும் அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button