World News

இம்ரான் கானின் உடல்நிலை சீரின்மை – சிறை மாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு!

ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு, வலது கண்ணில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ரத்த உறைவு காரணமாக இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே உள்ளது. சிறை அதிகாரிகளின் முறையான சிகிச்சையளிக்காத அலட்சியத்தால் அவரது 85 சதவீத பார்வை பறிபோய்விட்டது.

இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இம்ரான் கானின் உடல்நிலையை ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவக் குழுவை அமைக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி செய்தியாளர்களிடம் பேசுகையில், இம்ரான் கான் விரைவில் இஸ்லாமாபாத் சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிவித்தார்.

“இஸ்லாமாபாத்தில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய சிறைச்சாலை கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் பணிகள் முடிவடைந்ததும், இம்ரான் கான் அங்கு மாற்றப்படுவார். அவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என்பதால், தலைநகர் சிறையிலேயே அடைக்கப்படுவார்,” என்று அவர் கூறினார்.

இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, அவரது கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “இம்ரான் கானை உடனடியாக அல்-ஷிபா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது,” என அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button