இந்திய அணிக்கு புதிய சவால்: அபிஷேக் சர்மா உடல்நலக்குறைவு – சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு உருவாகுமா?

2026 டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக தொடங்கியிருந்தாலும், அணிக்கு தொடர்ந்து சோதனைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தற்போது கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, அமெரிக்க அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், வீரர்களின் உடல்நிலை குறித்த தகவல்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அவர் காய்ச்சலுடனேயே பேட்டிங் செய்ததாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
அபிஷேக் சர்மாவுக்கு காய்ச்சலுடன் கடுமையான வயிற்றுப் பிரச்சனையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்திய அணி பந்துவீசியபோது அவர் மைதானத்தில் பீல்டிங் செய்ய வராமல் டிரெஸ்ஸிங் ரூமிலேயே ஓய்வு எடுத்தார். அவருக்குப் பதிலாக பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் அணி தேவைகளைக் கவனித்தார்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் பிப்ரவரி 12ஆம் தேதி நமீபியா அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்குள் அபிஷேக் சர்மா முழுமையாக குணமடையவில்லை என்றால், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் முன்பு இஷான் கிஷனுக்காக பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், வைரல் காய்ச்சல் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா தற்போது குணமடைந்து வருகிறார். நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காயத்திலிருந்து மீண்ட வாஷிங்டன் சுந்தர், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருந்து நேரடியாக டெல்லி சென்று இந்திய அணியுடன் இணைய உள்ளதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஹர்ஷித் ரானா காயத்தால் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அபிஷேக் சர்மாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இந்திய அணி நிர்வாகத்துக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.




