Sri Lanka News

எம்.பி. கோடீஸ்வரனுடன் கடும் வாக்குவாதம் சபையில் அதிரடி காட்டிய மேயர் அதாஉல்லாஹ்!

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று  (26) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்நாயக்க மற்றும் மாவட்டத்தின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின்போது, சாகாமம் பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், புதிய நீர் வழங்கல் காரணமாக அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சார்ந்த கரையோரப் பிரதேசங்களில் நீர் விநியோகம் கணிசமாகக் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன் மாற்றுக்கருத்து கூற முற்பட்டபோது, இருவருக்குமிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

புதிய மக்களுக்கு நீர் வழங்குவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று குறிப்பிட்ட அதாஉல்லாஹ், ஆனால் அது “திருட்டுத்தனமாக” அமையக்கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அக்கரைப்பற்று நீர் வழங்கல் நிலையத்தில் இருந்து முறையான தொழில்நுட்ப ஆலோசனைகள் இன்றி புதிய இணைப்புகளை வழங்குவதால், தற்போதுள்ள பாவனையாளர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாவதாக அவர் சபையில் விளக்கிப் பாடம் புகட்டினார்.

தொடர்ந்து பேசிய மேயர், அக்கரைப்பற்று மாநகர சபை விடயத்தில் மாகாண உள்ளூராட்சி அமைச்சும், சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் பாரிய புறக்கணிப்புகளை மேற்கொண்டு வருவதாகக் காட்டமாகத் தெரிவித்தார். மேயர் அதாஉல்லாஹ் முன்வைத்த இந்தத் தர்க்கரீதியான வாதங்களைச் சபையில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி மற்றும் யானை வேலி பாதுகாப்பு போன்ற மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆளுநர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


#SocialTV #Akkaraipattu #Ampara #AlmAthaullah #Kodikwaran #EasternProvince #SLPolitics

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button