Sri Lanka News

சைபர் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னூறுக்கும் மேற்பட்டோர் கைது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமான சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சைபர் குற்றவாளிகளின் இலக்காக நாட்டின் இளம் சமூகத்தினர் மற்றும் முதியவர்கள் மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், இணையத்தளத்திற்குப் புதிதாகப் பிரவேசிப்பவர்களும் இந்தக் குற்றவாளிகளின் இலக்காகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதற்கமைய இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அவர், தமது கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை இவ்வாறான தரப்பினருக்கு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர், “யாராவது ஒருவர் மிகவும் பிரபலமான ஒரு நபராகவோ அல்லது பிரபலமான நிறுவனத்தின் பெயரிலோ உங்களுடன் தொடர்புகொண்டு, உங்களின் தொலைபேசி இலக்கம், கடவுச்சொற்கள் மற்றும் OTP இலக்கங்களைப் பெற்றுக்கொண்டு உங்களின் இலட்சக்கணக்கான பணத்தைக் கொள்ளையிட முடியும்.

அதேபோல் நீங்கள் இலட்சாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள், இலட்சக்கணக்கான சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்ற செய்தியுடன் உங்களை ஏமாற்றுகின்றனர்.

அந்த இலட்சக்கணக்கான பணப்பரிசைப் பெறுவதாயின் நீங்கள் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என வழிகாட்டுகின்றனர்.

பின்பற்ற வேண்டிய முறை என்ன? உங்களின் OTP இலக்கம், தனிப்பட்ட தகவல்கள், வங்கித் தகவல்கள் இவற்றை நாம் திரும்பத் திரும்பக் கூறினாலும், சில தாய்மார்கள், தந்தைமார்கள் மற்றும் இளைஞர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஒரு குற்றவாளிக்கு அல்லது மோசடிக்காரருக்கு வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button