மாணிக்கக்கல் இறக்குமதி வரியை தளர்த்த நடவடிக்கை

நாட்டின் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்குத் தேவையான மூல மாணிக்கக்கற்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் வரி நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது. இத்துறை சார்ந்தவர்களுக்குச் சலுகைகளை வழங்குவதையும், மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டும் இலக்கை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அதிகாரசபையின் தலைவர் எஸ்.பி. சமிந்த, இது இறக்குமதியாளர்களுக்குப் பெரும் நிவாரணமாக அமையும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மூல மாணிக்கக்கல் இறக்குமதியின் போது விதிக்கப்படும் வற் வரியைக் கணக்கிடும் முறையை மாற்றி, இறக்குமதியாளர்களுக்கு முன்பை விடப் பெரிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது புதிய முன்மொழிவின்படி, கொண்டுவரப்படும் ஒரு பொதிக்கு ஒரு குறிப்பிட்ட பெறுமதியை நாங்கள் நிர்ணயிப்போம். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பெறுமதிமிக்க கற்களான ரூபி, சஃபையர் (Sapphire), எமரல்டு (Emerald) போன்ற வகை கற்களை இறக்குமதி செய்யும் போது, ஒரு கிலோகிராமின் பெறுமதியை சுமார் 900 டொலர்களாக நாங்கள் மதிப்பிடுவோம். அந்த 900 டொலர்களுக்கே வற் வரி கணக்கிடப்படும். அத்துடன், 200 டொலர்களாக இருந்த சுங்கக் கட்டணத்தையும் இந்த புதிய நடைமுறையின் ஊடாக நீக்கியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.




