ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துபவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரிஇ பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.
அதிக வலுக்கொண்ட மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அந்த வாகனங்களைக் கைப்பற்றி அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
உந்துருளிகள் என்பது ஒருவரது பயண வசதிக்காகவே தவிர, பிரதான வீதிகளில் பந்தயங்களில் ஈடுபடுவதற்கோ, பாதசாரிகளை ஆபத்தில் தள்ளுவதற்கோ அல்லது ஒழுக்கத்துடன் வாகனங்களைச் செலுத்துபவர்களுக்கு இடையூறு விளைவிப்பதற்கோ அல்ல.
குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ள இந்த கலாசாரம் மிகவும் பயங்கரமானது.
எனவே, அதிக வேகத்துடன், அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் வாகனங்களைச் செலுத்துபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளோம்.
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிவேகமாகச் சென்று ஏற்பட்ட விபத்தில் ஒரு இளைஞன் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக்கிரியை ஊர்வலத்திலும் பலர் தலைக்கவசம் இன்றி உந்துருளிகளில் ஆபத்தான முறையில் பயணித்தனர்.
இளைஞர்களின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது அல்ல. எனவே, சட்டத்தை மிகக் கடுமையாக நிலைநாட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.



