Sri Lanka News

முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில், அரசியல் என்பது நில உரித்துடையோருக்கும், படித்த மற்றும் செல்வந்த உயர்குடியினருக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், 1956ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாதாரண பொதுமக்களுக்கும் அரசியலில் வாய்ப்பு கிடைத்ததால் பாரிய சமூக மாற்றம் ஏற்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அரசியல் என்பது செல்வந்தர்கள், வர்த்தகர்கள், முறையற்ற வகையில் பணம் சம்பாதிப்பவர்கள் மற்றும் செல்வந்த அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

இதன் காரணமாக, நேர்மையான சமூக சேவகர்கள் அரசியல் துறைக்கு வருவது தடைப்படும் என முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தாமும் மற்றும் ஒரு சிலரும் மாத்திரமே இந்த ஓய்வூதியத்தை சமூக மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குப் பயன்படுத்துவதாகவும், ஆனால் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியத்தை நம்பியே வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதால், அந்த சந்தர்ப்பத்தில் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கரு ஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button