டி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை: பட்லரை பின் தள்ளிய பெத்தும் நிஸங்க

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
லாகூரில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில், அவர் நான்கு இடங்கள் முன்னேறித் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
லாகூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் நோமன் அலி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
இதன்படி நோமன் அலி தற்போது 853 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம், அவர் 850 புள்ளிகளைக் கடந்த ஏழாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் யாசிர் ஷா (Yasir Shah) 2016ஆம் ஆண்டு ஜூலையில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.
அத்துடன் குறித்த புள்ளிப்பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.
இதேவேளை டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷீட் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க, பாகிஸ்தான் அணியின் அப்ரார் அஹமட் மற்றும் இலங்கை அணியின் நுவான் துஷார ஆகியோர் ஒவ்வொரு இடங்கள் முன்னேறி புள்ளிப்பட்டியலில் முறையே 6,7 மற்றும் 8 ஆம் இடங்களைப் பிடித்துள்ளனர்.
அத்தோடு டி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இலங்கை அணியின் பெத்தும் நிஸங்க 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதன்படி 4ஆம் இடத்திலிருந்த ஜோஸ் பட்லர் 5ஆம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.




