ஒரு நிமிடம் மௌனமான டுபாய் மைதானம்

இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தையினது மறைவுக்கு டுபாய் மைதானத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்று இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்த சுற்றின் முதலாது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தற்சமயம் மோதுகின்றன.
டுபாயில் இடம்பெறும் குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இந்தநிலையில், போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக, இலங்கை அணியின் சகல துறை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தையினது மறைவுக்காக மைதானத்தில் தேசிய கீதங்களுக்கு முன்னதாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, தமது தந்தையின் திடீர் மரணத்தையடுத்து நாடு திரும்பிய துனித் வெல்லாலகே, ஆசிய கிண்ணத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்றிரவு மீண்டும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமானார்.
இந்த நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் இலங்கை அணிக்காக விளையாடவுள்ளார்.






