இளைஞர்கள் பாராளுமன்றத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு குறித்து கவனம்..

இளைஞர் யுவதிகளுக்கு பாராளுமன்ற குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் கலந்துகொள்ள வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
பாராளுமன்றக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இளைஞர், யுவதிகள் கலந்துகொள்ள வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த விடயம் குறித்து சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஒன்றியத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களைத் தயாரிப்பது, சர்வதேச இளைஞர் ஒன்றியங்களுடன் இணைந்து இந்நாட்டு இளைஞர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இளைஞர்களை போதைப்பொருட்களிலிருந்து விலக்கி வைத்தல் மற்றும் தொழில்முனைவு, தொழில்களை மேம்படுத்துவது தொடர்பான திட்டத்தைத் தயாரிப்பது போன்ற விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதற்கு அமைய, இளைஞர்களை போதைப்பொருட்களிலிருந்து விலக்கி வைப்பது மற்றும் தொழில்முனைவு, தொழில்துறையின் மேம்பாடு குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்காக ஒன்றியத்தின் உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு குழுக்களும் நியமிக்கப்பட்டன.
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷன கமகே மற்றும் (சட்டத்தரணி) ஹசாரா லியனகே உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



