Sri Lanka News

அரசியல் நாடகங்களால் அநுர அரசு தடம் புரளாது! பீரிஸ் – நாமல் சந்திப்பை போட்டுத் தாக்கும் நளிந்த

பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் எத்தனை தடவை ஒன்றுகூடினாலும் தேசிய மக்கள் சக்தி அரசின் தூய்மையான அரசியல் பயணத்தை அவர்களால் தடுக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மக்கள் குரல் அமைப்புக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நேற்று பத்தரமுல்லையிலுள்ள ‘நெலும் மாவத்தை’ கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் வெவ்வேறு கொள்கைகளுக்காகப் பிரிந்து சென்றவர்கள், தற்போது தேர்தலை இலக்கு வைத்து மீண்டும் ஒன்றிணைவது மக்கள் நலனுக்காக அல்ல, மாறாகத் தங்களின் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே.

நேற்று வரை ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள், இன்று ஒரே மேசையில் அமர்ந்திருப்பது கொள்கைக்காக அல்ல.

மாறாக, தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுத்து வரும் ஊழலுக்கு எதிரான விசாரணைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவே இந்த அவசரக் கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன. மக்கள் இவர்களை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய தெளிவான ஆணையைச் சிதைக்க இவ்வாறான ‘நெலும் மாவத்தை’ சந்திப்புகள் முயற்சிக்கின்றன. ஆனால், பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் எத்தனை தடவை ஒன்று கூடினாலும், தற்போதைய அரசின் தூய்மையான அரசியல் பயணத்தை அவர்களால் தடுக்க முடியாது.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் போன்றவர்கள் ஒருபுறம் சஜித் பிரேமதாஸவைச் சந்திக்கின்றார்கள், மறுபுறம் ராஜபக்ஷக்களின் தலைமையகத்துக்குச் செல்கின்றார்கள். இவர்களுக்கு நிலையான கொள்கை கிடையாது. இவர்களின் நோக்கம் மீண்டும் அதிகாரத்தைப் பெற்று, தங்களின் பழைய சலுகைகளைப் பாதுகாப்பதே தவிர, மக்களின் குரலாக ஒலிப்பதல்ல.

இவ்வாறான அரசியல் நாடகங்களால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தடம் புரளாது. திருடப்பட்ட மக்கள் சொத்துக்களை மீட்கும் பணியும், ஊழல்வாதிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளும் எவ்விதத் தடையுமின்றித் தொடரும். – என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button