Sri Lanka News

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்! அமைச்சர் விளக்கம்

மத்திய கிழக்கில் தற்போது நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள அவசர நடவடிக்கைகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அந்தப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் இன்று காலை வரை இலங்கைக்கு வரவிருந்த 107 விமானங்கள் மற்றும் இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 98 விமானங்கள் என மொத்தம் 205 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஓமான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் வான்பரப்புகள் திறக்கப்பட்டிருந்தாலும், சிவில் விமானப் போக்குவரத்து இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை எனவும், அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் போன்ற வான்பரப்புகள் விசேட விமானங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், விமான நிறுவனங்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கான முழுத் தொகையையும் எவ்வித பிடித்தமும் இன்றி மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், பயணங்களை மீண்டும் திட்டமிடும்போது மேலதிக கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

அத்துடன், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களின் விசா காலத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவுத் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர அந்தந்த நாடுகளின் இலங்கை தூதரகங்கள் ஊடாகத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது லண்டன், பிராங்க்பர்ட் மற்றும் பாரிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்று வழித்தடங்கள் ஊடாக இயக்கப்படுகின்றன.

இந்த மாற்றத்தினால் பயண நேரம் சுமார் ஒரு மணித்தியாலம் அதிகரிப்பதோடு, மேலதிக எரிபொருள் தேவைப்படுவதால் விமானங்களின் சரக்குக் கொள்ளளவில் (Cargo) சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இலங்கையில் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடின்றி உள்ளதாகவும், அடுத்த 50 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிசக்தி கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிலைமை சீராகும் வரை பண்டாரநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்கள் ஊடாகச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button