இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, தனது முதல் விளையாட்டு முதலீடாக ‘டிங்கர்ஸ்’ அணியின் உரிமையைப் பெற்றுள்ளார்.
தனது நீண்டகால மேலாளரும் வர்த்தக கூட்டாளருமான அமில கலுகலேவுடன் இணைந்து இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ள மதீஷ பத்திரண, அணியின் நிர்வாகப் பங்காளராக அமில கலுகலேவை நியமித்துள்ளார்.
‘சிலோன் பிக்கிள் லீக்’ போட்டியில் ‘யாழ் டிங்கர்ஸ்’ என்ற பெயரில் அணி களமிறங்கவுள்ளது. இதன் மூலம் பிக்கிள்போல் விளையாட்டில் அணிக்கான தனித்துவமான போட்டி அடையாளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதீஷ பத்திரண தெரிவிக்கையில், “இது வெறுமனே ஒரு அணி அல்ல. நான் உண்மையாக நம்பும் ஒரு எண்ணக்கரு. யாழ் டிங்கர்ஸ் அணியை இரசிகர்கள் தங்களுடைய அணி என பெருமையுடன் அழைக்கும் வகையில் உருவாக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அணியின் மூலோபாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அமில கலுகலே முன்னெடுக்கவுள்ளார்.
எதிர்வரும் சிலோன் பிக்கிள் லீக் ஏலத்திற்காக யாழ் டிங்கர்ஸ் அணி தயாராகி வருவதுடன், சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணியை உருவாக்குவதிலும் இரசிகர் சமூகத்தை கட்டியெழுப்புவதிலும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

