அவசர சந்தர்ப்பங்கள், குற்றச்செயல்கள் மற்றும் பல்வேறு அநீதிகள் தொடர்பில் பொதுமக்கள் உடனடியாகத் தொடர்புகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முக்கிய அவசர தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
திடீர் விபத்துகள், குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.
சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் உரிமை மீறல்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்பில் 1929 என்ற தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் 109 என்ற சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அவசர இலக்கத்தைப் பயன்படுத்தலாம்.
அதேவேளை, போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் அது தொடர்பான இரகசியத் தகவல்களை வழங்குவதற்காக 1984 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.
பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், குறித்த அவசர தொலைபேசி இலக்கங்களைத் தங்களது கைப்பேசிகளில் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

