மாணவர்களின் குறையறிந்து உடனடி உதவி: சமூக ஆர்வலர் இர்ஷாத் ரஹீமின் நெகிழ்ச்சியான மனிதநேயப் பணி!
-தில்ஷாத் பர்வீஸ்-
கமு/சது/ அல் – அர்சத் மஹா வித்தியாலய பாடசாலை மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தும் நோக்கில், பாடசாலையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வைட் போர்டுகள் (Whiteboards) மற்றும் அலுமாரிகளை வழங்குவதற்காக சமூக ஆர்வலரும், Greenland அறக்கட்டளைத் திட்ட ஒருங்கிணைப்பாளரும், Saffiya கட்டுமான திட்டப் பணிப்பாளருமான சமூக ஆர்வலர் இர்ஷாத் ரஹீம் பாடசாலையின் காலை ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
அந்நிகழ்வின் போது மாணவர்களுடன் இணைந்து நின்றவேளையில், சில மாணவர்கள் மிகவும் சேதமடைந்த மற்றும் கிழிந்த பாதணிகளுடன் நிற்பதை அவர் கவனித்தார். “கல்வி கற்கும் எந்தவொரு மாணவனும் அடிப்படைத் தேவையான நல்ல பாதணியின்றி சிரமப்படக் கூடாது” என்ற உயரிய மனிதநேய நோக்கில், அவர்களுக்கு உடனடியாக உதவ அவர் முன்வந்தார்.
பாடசாலையில் காணப்படும் மாணவர்களில் முதல் கட்டமாக 25 மாணவர்களை தெரிவுசெய்து கடந்த 24/08/2026 அன்று அவர்களுக்குத் தேவையான புதிய பாதணிகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், வேறொரு தேவைக்காக பாடசாலைக்கு வருகை தந்த போதிலும் அங்கு நேரில் சில மாணவர்களின் குறையை உணர்ந்து உடனடியாகத் தீர்வு கண்டமை இர்ஷாத் ரஹீம் அவர்களின் சமூக அக்கறைக்கும் மனிதநேயத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
குறித்த பாதணி வழங்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் ரஹீம், பிரதி அதிபர் ஜெஸீல், ஆரம்பப் பிரிவுப் பொறுப்பாளர் மஜீதா தாஸிம் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

