-Socialtv செய்தி பிரிவு முகாமையாளர் ஷிஹானா நௌபர் –
நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் சிறுவர்களிடையே நேர்மறை எண்ணங்கள், இரக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் ‘சாதி குழந்தைகள் சங்கம்’ (Sama Lama Samajaya) எனும் தேசிய விசேட திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வழிகாட்டலில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், நகர்ப்புற குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.
இதன் தொடக்க விழா கொழும்பு 15, மோதறை ‘மிஹிஜய செவண’ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
நீண்டகாலமாக ஒரே மாதிரியான எல்லைகளுக்குள் வாழும் நகர்ப்புற குடியிருப்புவாசிகளின் வாழ்வாதார மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இணையாக, அவர்களின் பிள்ளைகளின் மனப்பான்மையில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
பல்வேறு இனம், மதம் மற்றும் சமூக பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் அன்பை கட்டியெழுப்புவதுடன், குற்றச்செயல்கள் அற்ற சட்டத்தை மதிக்கும் நற்பிரஜைகளாக சிறுவர்களை உருவாக்குவதும் இதன் நீண்டகால திட்டமாகும்.
2026 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து முக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ‘மிஹிஜய செவண’, ‘ரந்திய உயன’, ‘முவதொர உயன’, ‘சிரிமுத்து உயன’ மற்றும் கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ‘லக்ஸந்த செவண’ ஆகிய குடியிருப்புகளின் சிறுவர்கள் இதன்போது பயனடைவர்.
திறமைமிக்க மற்றும் ஆளுமையுள்ள சிறுவர்களை உருவாக்குவதுடன், பாடசாலைக் கல்வியை இடையில் கைவிட்ட மற்றும் பாடசாலை செல்லாத பிள்ளைகளுக்கு மீண்டும் முறைசார் கல்வியைப் பெற்றுக்கொடுப்பதும் இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
இந்நிகழ்வில் அரச உயர் அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான சிறுவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

