மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் துணைத் தலைவராக தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளார்.
மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடும் பயன்பெறும் என்றும், இரு மாநிலங்களும் ‘நீர் பங்கீடு’ என்ற நிலையிலிருந்து ‘நீர் ஒத்துழைப்பு’ என்ற நிலைக்கு நகர வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டதாகக் செய்திகள் வெளியாகின.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் விஜய், நதிநீரை உரிய முறையில் பங்கிட்டு வழங்காமல் தென் மாநிலங்களிடையே ஒத்துழைப்பிற்கு வாய்ப்பில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் உரிய நேரத்தில் கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளால் தென் மாநிலங்களில் உள்ள எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்பதற்கான சட்டபூர்வ உறுதிமொழியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், ஆன்லைன் வாயிலாக நடைபெறும் போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுக்க கடுமையான சட்ட விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்தார்.
காவிரி உரிமையை நிலைநாட்டுவதிலும் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாப்பதிலும் உறுதியோடு குரல் கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

