எதிர்வரும் காலங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் – நீர் வழங்கல் சபை

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளதாவது, தற்போது சபை அவ்வாறான நீர் வெட்டு எதனையும் அமுல்படுத்தவில்லை.
எனினும், நிலவும் காலநிலை நீடித்தால் வரும் நாட்களில் நாள் முழுவதும் தடையின்றி நீர் வழங்குவது கடினமாக அமையும். அம்பத்தலை உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனாலும், உயர்ந்த பகுதிகளில் வசிப்போருக்கு குறைந்த அழுத்தத்திலேயே நீர் கிடைத்து வருகின்றது. எதிர்வரும் காலங்களில் மழையை எதிர்பார்ப்பதாகவும், அதுவரை தற்போதுள்ள நீர் கொள்ளளவை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், குறைந்த அழுத்தத்தில் நீர் கிடைக்கும் பகுதிகளுக்கு தற்போது பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தாலும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருந்தாலும், நீர் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்தார்.
நீர் வழங்கல் அதிகார சபையின் மொத்த இயக்கச் செலவுகளில் 20% முதல் 30% வரை மட்டுமே மின்சாரத்திற்காகச் செலவிடப்படுவதாக அவர் கூறினார்.
நீர் கட்டணத் திருத்தம் என்பது ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நடைபெறும் ஒரு கொள்கை என்றும், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கட்டண மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் கூறினார்.
அதன்படி, நீர் கட்டணங்கள் தொடர்பாக ஏதேனும் மதிப்பீடு செய்யப்பட்டால், அது ஜூன் 30-ஆம் திகதிக்குப் பின்னறே நடைபெறும் என்று கூறியுள்ளார்.



