Sri Lanka News

வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் குளிர்ந்த நீரோட்டம்: இலங்கையின் கடல் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றம்.

இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்

சமீப நாட்களாக வட கடல் பகுதி வழமையை விட அதிக குளிராகக் காணப்படுகிறது.

இந்த மாற்றமானது இலங்கையின் ஒட்டுமொத்த வானிலைப் பாங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

வடக்கிலிருந்து ஆரம்பிக்கும் இந்தக் குளிர்ந்த நீர், கிழக்குக் கரையோரம் வழியாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக அவர் விளக்கியுள்ளார்.

இந்த நீரோட்டத்தின் காரணமாக, இலங்கையின் தெற்குப் பகுதியில் நிலவும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது குறைக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

‘டித்வா’ (Ditwah) புயல் மறைந்ததைத் தொடர்ந்து, நிலப்பரப்பில் பதிவாகும் வெப்பநிலையில் பெரும் மாற்றங்கள் தென்படுகின்றன.

குறிப்பாக, கடந்த சில நாட்களாக இலங்கையில் பதிவாகும் அதிகூடிய வெப்பநிலை இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகி வருவதாக விரிவுரையாளர் பிரதீபராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக நாடுகளின் காலநிலை மற்றும் மழைவீழ்ச்சியைத் தீர்மானிப்பதில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (SST) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, தற்போது வடக்குக் கடலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் குளிர்ச்சி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றாகும்.

இந்த விவகாரத்தை பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசியல் மற்றும் நிர்வாகத் துறையினரும் மிகுந்த கரிசனையுடன் அணுக வேண்டும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button