சாய்ந்தமருது ஹிதாயா மத்ரஸாவில் பரிசளிப்பு விழா

(அஸ்லம் எஸ்.மெளலானா)
சாய்ந்தமருது மத்ரஸதுல் ஹிதாயா குர்ஆன் பாடசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச அறபு மொழி தின நிகழ்வும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று ஹிதாயா பள்ளிவாசலில் வெகு சிறப்பாக நடைபெற்றன.
மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் ஏ.எம். ஜௌபர் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவடிப்பள்ளி சஹ்த் இஸ்லாமிய அறபுக் கல்லூரியின் விரிவுரையாளரும் சாய்ந்தமருது ஹிலால் பள்ளிவாசல் பேஷ் இமாமுமான அஷ்ஷெய்க் யூ.எல்.எம். யாஸிர் விஷேட மார்க்க சொற்பொழிவாளராக கலந்து கொண்டு வாழ்வியலில் அல்குர்ஆனின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.
அத்துடன் மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசல் பேஷ் இமாமும்
மத்ரஸா அதிபருமான அஷ்ஷெய்க் எஸ்.ஏ.எம். ஜினான், சாய்ந்தமருது ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். சலீம், மத்ரஸா முஅல்லிம் அஷ்ஷெய்க் ஏ.கே.எம். சமீர் ஆகியோரும் உரையாற்றினர்.
இவர்களுடன் சாய்ந்தமருது ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எச்.எம். நப்றாஸ், இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஓய்வுபெற்ற உதவிப் பணிப்பாளர் அப்துல் லத்தீப், ஓய்வுபெற்ற அதிபர் அப்துல் ஹமீட், பள்ளிவாசல் முஅத்தின் எம்.ஐ. அபூபக்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்தனர்.
இதன்போது மாணவர்களினால் அறபு மற்றும் இஸ்லாமிய மார்க்கம் சம்மந்தப்பட்ட அறிவுசார், கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. சிரேஷ்ட அறிவிப்பாளர் எம்.பி.எம். றின்ஸான் விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் பங்கேற்றிருந்தனர்.






