தேசிய மின்சக்தி கொள்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை;மின்சார சபை மறுசீரமைப்பு தாமதம்!

தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும், தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால்,தேசிய மின்சக்தி கொள்கைக்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது மேலும் தாமதமடைந்துள்ளது.
இதன் காரணமாக இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடைவதுடன், இலங்கை மின்சார சபை கலைக்கப்படும் திகதியை அறிவிப்பதும் பிற்போடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் 5 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டதுடன், அவற்றில் 4 கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
தேசிய மின்சக்தி கொள்கையைத் தயாரிக்கும் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்னரே இலங்கை மின்சார சபை கலைக்கப்படும் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், குறித்த நடவடிக்கைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி 28ஆம் திகதி வெளியிடப்படும் என இலங்கை மின்சார சபை முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



