க்ரேட் மைன்ட் கெம்பசின் மாபெரும் பட்டமளிப்பு வைபவம்- தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு

(சுலைமான் றாபி)
இலங்கையில் இயங்கி வரும் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான க்ரேட் மைன்ட்ஸ் கெம்பசினால் டிப்ளோமா பயிற்சிகளைத் தொடர்ந்த 270 மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் நேற்று (04) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
க்ரேட் மைன்ட்ஸ் கெம்பசின் தலைமை நிறைவேற்று அதிகாரி பஸ்லான் ஏ காதர் தலைமையில் நடைபெற்ற இந்த டிப்ளோமா பட்டமளிப்பு நிகழ்வில், களனி பல்கலைக்கழகத்தின் மனித வளத்துறை பேராசிரியர் கே.ஏ.எஸ் தம்மிக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பயிற்சி நெறியை நிறைவு செய்த 91 மாணவர்களுக்கும், உளவியல் மற்றும் ஆலோசனையில் டிப்ளோமா பயிற்சி நெறியை நிறைவு செய்த 85 மாணவர்களுக்கும், ஆங்கிலத்தில் டிப்ளோமா பயிற்சி நெறியை நிறைவு செய்த 60 மாணவர்களுக்கும், ஆய்வு முறையியலில்
டிப்ளோமா பயிற்சி நெறிகளை நிறைவு செய்த 34 மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரமிக்க பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா கல்வித்தகைமைச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் இதற்கு மேலதிகமாக, மனநலம் குறித்த சமூக சேவைத் துறையில் விழிப்புணர்வு பயிற்சிகளை மேற்கொண்ட 110 பாடசாலை மாணவர்களுக்கும் விஷேட சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப்.எச்.ஏ.சிப்லி, இந்தியாவிலிருந்து வருகை தந்த உளவியல் நிபுணர் கலாநிதி ஹுசைன் பாஷா, தேசிய பொலிஸ் அகடமியின் பிரதான பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த டி சில்வா, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே. யோகராஜ், பயிற்சி நெறிகளின் துறைசார் விரிவுரையாளர்கள், கல்வி நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
“பல்துறைசார் கல்வி வழங்களின் மூலம் சமூக மேம்பாடு” எனும் க்ரேட் மைன்ஸ் கெம்பஸின் நோக்கக்கூற்று பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.











