Sri Lanka News

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; களைகட்டும் அறுகம்பை கடற்கரை..!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம்பே கடற்கரைப் பிரதேசம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்பிரதேசத்திற்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து தற்போது நாடு மீளளெழுச்சி பெற்று வருவதனால் இப்பிரதேசத்தின் துறைசார்ந்த மக்களின் வாழ்வாதார விருத்தி ஏற்பட்டு வருவதுடன் வர்த்தக பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப் படுத்துவதற்காகவும் கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர இப்பகுதிகளில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகையினைப் போல் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு விருப்புடன் வருகை தருகின்றனர்.இதனால் தங்குமிட வசதிகள் உணவகங்கள் அதிகளவில் இப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளன.

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இப்பிரதேசத்தில் முகாமிட்டு சில நாட்கள் தங்கியிருந்து இப்பிரதேசத்தின் அழகினை இரசிப்பதனால் இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிலையங்கள் பல்வேறானவை அமையப் பெற்றுள்ளன.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் சுமார் 30 ஆயிரத்துக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஏப்ரல் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளின் வருகை மற்றும் பொழுதுபோக்கும் பருவ கால இடமாக கூறப்படுகின்றது.

இதை விட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பேராதனைப் பூங்கா, நுவரெலியா , பாசிக்குடா, உல்லை , போன்ற இடங்களுக்கு பெருமளவில் சென்று பொழுதைக்கொண்டாடி உல்லாசமாக கழித்து வருகிறார்கள்.

குறிப்பாக அறுகம்பை உல்லை பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் உள்ளூர் சுற்றுலா பயணிகளும் சரளமாக இணைந்து குதூகலமாக பொழுதைக் கழிப்பதற்காக இப்பிரதேசத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இதேவேளை அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக’ கூறி சமூக ஊடகங்களில் சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதனை மறுத்த சுற்றுலா பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க,

சில குழுக்கள் சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் சுற்றுலாத் துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button