QR குறியீடு மோசடிகள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் இடம்பெற்றுள்ள பாரிய அளவிலான QR குறியீடு மோசடிகள் தொடர்பாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க கடந்த மார்ச் 15 முதல் QR குறியீடு முறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், முறைமையில் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால இற்றைப்படுத்தல்களைப் (System Update) பயன்படுத்தி, ஒரு சில நபர்கள் மற்றவர்களின் வாகனங்களுக்கு முறையற்ற வகையில் QR குறியீடுகளை உருவாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
புதிய முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட ஒரே நாளில் சுமார் 600,000 புதிய QR குறியீடுகள் மோசடியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த மோசடிகளுடன் தொடர்புடையவர்களின் IP முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களைக் கொண்டு அவர்களைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இவ்வாறான தொழில்நுட்ப முறைகேடுகளுக்கு மத்தியிலும், நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.




