Sri Lanka News

73 வாகனங்களுக்கு காலக்கெடு – திடீர் வாகன சோதனையில் நடவடிக்கை

நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன சோதனையின்போது, 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட தலைமை கார் பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையின் கீழ் நுவரெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்தச் சோதனையில் நுவரெலியா – பதுளை மற்றும் நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியூடாகப் பயணிக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூரப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் உட்பட 100 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது பெற்றோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களில் அதிகளவான புகையை வெளியேற்றும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த வாகனங்களை சீர்செய்வதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கொண்ட திடீர் வாகனச் சோதனையின்போது 73 வாகனங்களுக்கு உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவற்றின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதில் 25 தனியார் பேருந்துகள் அடங்கலாக 73 வாகனங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உரிய வாயு பரிசோதனை மேற்கொள்ளாது, போக்குவரத்துக்கான தரத்தைக் கொண்டிராத வாகனங்களுக்கே, தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள 14 நாட்களுக்குள் வாகனங்களை சீர்செய்து நுவரெலியா மாவட்ட கார் போக்குவரத்து பரிசோதகர் காரியாலயத்தில் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அதன் பின்னரே தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகன வருவாய் பத்திரம் மற்றும் வாகன ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் வாகன உரிமையாளர்களுக்கு நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரதான பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.

தரமான போக்குவரத்து சேவையை உறுதி செய்யும் நோக்கில், நுவரெலியா மாவட்டத்தில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஜாலிய பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button