வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகள், விமான நிலையத்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட தங்களது சொந்த இடங்களுக்கு செல்வதற்கும், விடுமுறை காலங்களில் பயணம் செய்வதற்கும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை போலீசார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகள் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல் போன்ற சம்பவங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், வாடகை வாகனம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனத்தின் பதிவு இலக்கம் மற்றும் ஓட்டுநரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்த பின்னரே பயணத்தைத் தொடங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது தொலைபேசி அல்லது Google Maps மூலம் நேரலை இருப்பிடத்தை குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பகமான நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இலக்கை அடையும் வரை தங்களது பயணத்தை அவர்கள் கண்காணிப்பதை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரப் பயணங்களின்போது ஓட்டுநர் அறிமுகமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது எதிர்பாராத பாதைகளில் செல்ல முயற்சித்தால் பயணிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பயணத்தின் போது அறிமுகமில்லாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மயக்கமருந்து கலந்த உணவு அல்லது பானங்களை வழங்கி பயணிகளை மயக்கமடையச் செய்த சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பயணத்தின் போது பணம், விலையுயர்ந்த பொருட்கள், கைபேசிகள் மற்றும் நகைகள் போன்றவற்றை பிறருக்குத் தெரியும் வகையில் வைத்திருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அச்சுறுத்தலை உணர்ந்தாலோ உடனடியாக போலீசாரின் 119 அவசர உதவி இலக்கத்தையோ அல்லது 118 அவசர தகவல் சேவையையோ தொடர்புகொண்டு, வாகனம் மற்றும் சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்களை வழங்குமாறு பயணிகளிடம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

