அம்பாறையில் ‘பிரஜா சக்தி’ திட்ட முன்மொழிவு தயாரிப்பு கருத்தரங்கு:மேலதிக அரசாங்க அதிபர் பங்கேற்பு!

(சர்ஜுன் லாபீர்)
பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமூகங்களை வலுவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் கீழ், முறையான திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு இன்று (31)அம்பாறை மாவட்ட செயலக ஆரியத்தன மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ. முனாஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது, கிராமிய மட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை வினைத்திறனாகப் பயன்படுத்துவது தொடர்பிலும், அதற்கான வியாபார திட்ட முன்மொழிவுகளை (Business Proposals) சர்வதேச தரத்திற்கேற்ப எவ்வாறு வடிவமைப்பது என்பது குறித்தும் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சிற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட திட்டங்களுக்கான முறையான வியாபாரத் திட்டங்கள் மற்றும் திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, நிலுவையிலுள்ள திட்டங்களை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது குறித்து உத்தியோகத்தர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்டத்தின் பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கிராமப்புற மக்களின் பொருளாதாரத் தேவைகளை இனங்கண்டு, அவற்றுக்கான முறையான செயற்திட்டங்களை உருவாக்கி, உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதன் ஊடாக மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியை உறுதிப்படுத்த முடியும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்குத் திட்ட முன்மொழிவு தயாரிப்பில் உள்ள சவால்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப உத்திகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், சமூகப் பொருளாதார மேம்பாட்டில் இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.









