இஸ்ரேலால் பாலஸ்தீனம் “உலகின் கண்முன்னே அழிக்கப்பட்டு வருகிறது” எனக் குற்றம்சாட்டியுள்ள முன்னாள் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தூதர்கள், இஸ்ரேலுக்கு எதிராக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட முன்னாள் மூத்த தூதர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதத்தில், இஸ்ரேல் இன அழிப்பு (Ethnic Cleansing) நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பாலஸ்தீன அரசை ஏற்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வர்த்தகத் தடை மற்றும் ஆயுத விற்பனைத் தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
52 முன்னாள் பிரெஞ்சு தூதர்களும், 50 முன்னாள் பிரிட்டிஷ் தூதர்களும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இவர்களில் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் மூத்த தூதரகப் பதவிகளில் பணியாற்றியவர்கள் ஆவர்.
பிரிட்டிஷ் முன்னாள் தூதர்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் தூதர்களான ஜெரமி கிரீன்ஸ்டாக் மற்றும் எமிர் ஜோன்ஸ் பாரி ஆகியோரும், பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான முன்னாள் இயக்குநர் எட்வர்ட் சாப்ளின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் தரப்பில், முன்னாள் மத்திய கிழக்கு விவகார இயக்குநர் பாட்ரிஸ் பவோலி மற்றும் ஜெருசலேமில் முன்னாள் பிரான்ஸ் தூதரகத் தலைமை அதிகாரியாக இருந்த ஸ்டானிஸ்லாஸ் டி லாபுலே உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நவீன மத்திய கிழக்கின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், இரு நாடுகளும் 2025ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இஸ்ரேல் தற்போது உண்மையான ஜனநாயக நாடாக உலகத்தால் பார்க்கப்படுவதில்லை என்றும் அந்தக் கடிதத்தில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் வெளியானதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இஸ்ரேல் வெளியிட்ட குடியிருப்பு கட்டுமான ஒப்பந்த அறிவிப்புகளுக்கு எதிராக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்திருந்தன. புதிய குடியிருப்புகள் அமைக்கும் திட்டம் இஸ்ரேலை அமைதியிலிருந்து மேலும் விலக்கி, அதன் சர்வதேச மதிப்பை பாதிக்கும் என்றும் அந்த நாடுகள் தெரிவித்திருந்தன.

